(இ - ள்.) துடியர் - உடுக்கையையுடையவரும், தொண்டகப் பாணியர் - தொண்டகப்பறையை முழக்கும் கையினரும், வாளியர் - அம்பு, வில் முதலிய படைக்கலங்களை யுடையவரும், கடிய செய்து - ஆறலைத்தன் முதலிய கொடிய தொழில்களைச் செய்து, முனைப்புலம் கூட்டுணும் - செருக்களத்திற் கிடைத்த பொருள்களைக் கூடி உண்பவரும், கடிய நீர்மையர் - தறுகண்மை முதலிய கடுமையான பண்புடையோரும், கானகங் காக்கும் - நின் ஏவலால் இக்கானகத்தைக் காவல் செய்குநரும் ஆகிய, நின் அடியர் அல்லது அல்லார் - உன்னுடைய அடிமையாவர் அன்றி அல்லாத வேறு பிறர், அவண் இல்லை - அக்கடுஞ்சுரத்தில் வாழுநர் இல்லை, (எ - று.) “முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பழிந்து நடுங்கு துயருறுத்தும் என்பவாகலின், இது குறிஞ்சிதிரிந்த பாலையெனக் கொள்க; அற்றாகலினன்றே குறிஞ்சிக்குரிய தொண்டகப்பறை கூறியதூஉம், என்க. |