(இ - ள்.) கொண்டல் வாடை என்னும் - வடகீழ்த்திசைக் காற்று என்னும், கூத்தன் - ஆடலாசிரியன், யாத்த கூத்தின் மாட்சியால் - செய்தளித்த கூத்தியல் நூலின் மாண்பினை மேற்கொண்டு, விண்டமா மலர்ப் பொதும்பு - விரிந்த பெரிய மலர்களையுடைய பூம்பொழில்கள், அரங்மா - கூத்தாட்டரங்கமாக, விரும்புநீர் வண்டுபாட விரும்பியதொரு தன்மையில் அளிகள் இசைபாட, வல்லியென்னும் மாதர் - பூங்கொடிகள் என்னும் கூத்தியன் மடந்தையர், ஆடும் நாடகம் - ஆடுகின்ற கூத்தாட்டை, கொன்றை கண்டு - கொன்றையாகிய அரசு கண்டு, பொன் சொரிந்தது - தம் பூவாகிய பொன்னை அள்ளிப் பரிசிலாக வழங்கின, காந்தள் கைமறித்த - காந்தளாகிய கூத்தச் சிறுமியர் கை ஏந்தி அப்பொன்னை ஏற்றனர், (எ - று,) வாடையாகிய ஆடலாசிரியன் தொகுத்த கூத்தியல் நூலிற்கேற்ப, பூம்பொழில் அரங்காக வண்டுபாட, கொடிகளாகிய மகளிர் ஆடும் நாடகத்தைக் கண்டு மகிழ்ந்து, கொன்றைகள் மலராகிய பொன்னைப் பரிசிலாகப் சொரிய, காந்தள் ஆகிய அக்கூத்தியர் சிறுமிகள் அப்பொன்னைக் கையில் ஏந்தினர் என்க. |