(இ - ள்.) கை மலர்த்த காந்தளும் - கைகளைப்போல அரும்புகளை மலர்வித்த கோடல்களும், மை மலர் தடங்கண் நேர் - மை பூசப்பட்ட மலர்ந்த பெரிய கண்களுக்கு உவமையாக; வகுத்து அலர்ந்த கரியநீர் கருவளை வட்டமும் - பகுதிப்பட மலர்ந்த கருநிறமுடைய கருவிளையின் மலர் வட்டமும்; முறுவல் ஒத்த - பற்களை ஒத்த, மொய்ம்மலர்ப் பொதும்பின்மேல் முல்லையும் - செறிந்த மலர்ப்பொழிலின்மேற் படர்ந்து அரும்பிய முல்லைகளும், கொய்மலர் குழற்றிரட்சி கொண்டு - கொய்தற்குரிய மலர் அணிந்த அளகப் பின்னலை உவமையாகக் கொண்டு, காய்த்த கொன்றையும் - காய்த்துள்ள கொன்றை மரங்களும், (எ - று.) முல்லைக்கானம் காந்தட் கைகளையும், கருவிளையாகிய கண்களையும், முல்லையாகிய பற்களையும், கொன்றைக் காயாகிய கூந்தலையும், (முடிவு அடுத்த செய்யுளிற் காண்க.) |