இருவரும் இளமை எய்துதல்

79. திருவிளைத் துலகுகண் மலரத் 1தெவ்வர்தம்
புரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ 2ரிளைமை யெய்தினார்.
 

     (இ - ள்.) திருவிளைத்து - செல்வத்தை மிகுதிப்படுத்தி; உலகு கண்மலர - உலகம்
விளக்கத்தையடைய; தெவ்வர்தம் - பகைவர்களுடைய; புரிவளை - கோட்டையாலே
சூழப்பெற்ற; நல்நகர்ச் செல்வம் - நல்ல நகரங்களிற் பொருந்தியுள்ள செல்வம்; புல் என -
பொலிவழிய; வரிவளைத் தோளியர் மனத்துள் - வரிகள் அமைந்துள்ள வளையல்களை
யணிந்துள்ள தோள்களையுடைய பெண்களின் உள்ளத்துள்; காமநோய் - இன்பநோயானது;
எரி - தீயைப்போல்; வளைத்திடுவதோர் - வளைத்துக் கொள்ளத்தக்க; இளமை எய்தினார் - காளைப் பருவத்தையடைந்தார்கள். (எ - று.)

     விசய திவிட்டர்களது தோற்றத்தால் உலகம் எல்லா வகைச் சிறப்புக்களையும் இனிது
பெற்று மிளிர்கின்றது. எங்கும் இன்பந்திகழ்கின்றது. விசய திவிட்டர்கள் தோளாண்மையிலே
சிறந்து விளங்கு கின்றார்கள். பகைவர்களுடைய நாடுகளைக் கவர்ந்து அவர்களுடைய
செல்வத்தைக் கைப்பற்றிக்கொள்ளுதலும் இவர்கட்கு அருமையான செயலன்று. இதனால்
இவர்களுடைய பகைவர்களுடைய செல்வத்தை வெறுத்து நிற்கிறார்கள். இவர்களுடைய
இளமைச் செவ்வி மங்கையர் களுடைய உள்ளத்திலே காமத்தீயை வளர்க்கக் கூடியதாக
அமைந்து நிற்கின்றது. எரிவளைத்திடுதல் - தீச் சூழ்ந்து கொள்ளுதல்.

( 10 )