792.

3தேனவாவி மூசுகின்ற 4தேம்பிறழ்பூ தாங்கலந்து
கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்
றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்
கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே.

      (இ - ள்.) தேன் அவாவி மூசுகின்ற - அளிகள் விரும்பி வீழ்கின்ற, தேம்பிறழ்பூ
தாம்கலந்து - தேன் துளும்புகின்ற மலருடன் கலந்து, கான நாவல் - காட்டுநாவல் மரங்கள்,
கொம்பினிற்கனிந்து - கிளைகளிலே பழுத்து, கால் அசைந்து - காற்றால் அசைக்கப்பட்டு
உதிர்ந்துகிடப்ப, அவற்று ஏனைமாடு - அவற்றின் அயற்பக்கங் களிலே, வண்டு இருந்து -
கரியநிற முடைய வண்டுகளும் மொய்த்தலால், இருண்ட கானம் - இருண்டு தோன்றுகின்ற
காடு, இங்கு இதற்கு ஊனமாக - இங்கு இந்நிலவொளி பரந்தாற்போற்றோன்றும் காட்சிக்கு
முரணாக, இருட்பிழம்பு உறங்குகின்றது ஒக்கும் - இருட்கற்றை நிறைந்தது போன்று
தோன்றும், (எ - று.)

     ஒருசார் முல்லை முதலிய மலர்மிக்கு நிலவொளி தோன்றினாற் போற் றோன்றும்
அக்காட்டினூடே, இதற்கு முரணாகக் காட்டு நாவற் பழங்கள் கனிந்து உதிர்ந்து கிடப்ப,
ஆங்குக் கரிய வண்டுகளும் செறிய மொய்த்துள்ள தோற்றம், ஒருசார் இருள் படுத்துறங்கிக்
கிடந்தாற் போற்றோன்றும் என்க.

( 220 )