(இ - ள்.) வாய் இதழ்த்திறங்கொள - செவ்விய வாயின் கண் உள்ள அதரங்களின் தன்மைகொண்ட, கனிந்த தொண்டை வந்து - பழுத்த கொவ்வைக்கனிகள் வந்துபொருந்தாநிற்ப, ஒசிந்து - அசைந்து, தூயிதழ்த் துணர் துதைந்து - தூய்தாகிய இதழையுடைய பூங்கொத்துக்கள் செறிந்து, தோன்றுகின்ற தோன்றியின் - காணப்படுகின்ற செங்காந்தளினது, பாயிதழ்ப் பரப்பின்மேல் - அகன்ற மலர்ப்பரப்பின்மேல், அரத்த கோபம் ஊர்ந்து - இந்திர கோபப்புழுக்களும் ஊரா நிற்ப, அயல் - பக்கத்தே, சேயிதழ்ப் பொலிந்த காடு - வெவ்விதழ்களையுடைய மலரால் பொலிவுற்ற அக்காடு, செக்கர் வானம் ஒக்கும்- செக்கர் வானத்தைப்போலக் காணப்படும், (எ - று.) மற்றொருசார் சிவந்த கொவ்வைக் கொடிகள் படர்ந்து கனிந்துண் மையாலும் செங்கோடல்கள் நிறையப் பூத்துண்மையாலும் அவ்விடத்தே இந்திரகோபப் புழுக்கள் ஊர்தலுண்மையானும் செக்கர்வானத்தை ஒத்துச் செவேலெனத் தோன்றும் என்க. |