798.

கறவைகன்று வாய்மிகுத்த வமிழ்தினோடு கண்ணகன்
புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்
பறவையுண்டு பாடவும் 1பால்பரந்த 2பூமியி
னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே.

      (இ - ள்.) கறவைகன்று வாய்மிகுத்த - கறவைப் பசுக்கள் தம் கன்றுகளை வாயின்
ஊட்டிய பின்னர் மிக்குச் சொரிந்த, அமிழ்தினோடு - தீம்பாலாகிய அமிழ்தத்தோடே,
கண்அகன் புறவின் - இடம் அகன்ற முல்லை நிலத்தின்மேல், மாமரைமுலைப்
பொழிந்தபால் - பெரிய மரைகள் தம் முலைகள் சுரந்து விம்மிப் பொழிந்த பாலும்,
நெகிழ்ந்து எழ - பெருகி ஓட, பறவையுண்டு - பறவைகள் அப்பாலைப் பருகி, பாடவும் -
பாடாநிற்பவும், பால் பரந்த பூமியின் - அப்பால் பரவிய அந்நிலத்தின்மேல், நறவு விண்ட
நாகுமுல்லை - தேனைப்பொழிந்த, இளமைமிக்க முல்லைகள், வாய்திறந்து நக்கவே - தம்
மலர்வாய் திறந்து முறு வலித்தன, (எ - று.)

     ஆன்களின் கன்றுண்டெஞ்சிய பாலோடே, மரைகளின் பாலும் கலந்து பெருகி
ஓடாநிற்ப, அப்பாலைப் பறவைகள் பருகி மகிழ்ந்து பாட, அப்பாலோடே முல்லைக்
கொடிகள் தம் தேனையும் கலந்து, (பாலோடு தேனும் கலந்துண்டு பாடுக பறவையீர்! என்று
மகிழ்ச்சியாலே) சிரித்தன என்க.

( 226 )