விசயதிவிட்டர் முல்லைநிலங்கடந்து மருதநிலம் எய்துதல்

799.

வேரல்வேலி மால்வரைக் கவானின்வேய் விலங்கலிற்
சாரன்மேக நீர்முதிர்ந்து 3தண்டளிது ளித்தலால்
மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்
நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார்.

     (இ - ள்.) வேரல் வேலி மால்வரை - குறும்புதல்களை வேலியாக வுடைய பெரிய
மலைகளின், கவானின் - பக்கங்களினும், வேய்விலங்கலில் - மூங்கில்கள் செறிந்த
மலைகளினும், சாரல் மேகம் - சார்தலுடைய முகில்கள், நீர் முதிர்ந்து - நீரான்மிகுந்து,
தண் துளி - குளிர்ந்த மழைத்துளிகளை, துளித்தலால் - பெய்தலால், மூரல்வாய் அசும்பு
அறாத முல்லை - பற்கள் போன்ற அரும்புகளில் தேன்றுளித்தல் அறாத முல்லைகள்,
விள்ளும் எல்லைபோய் - மலர்கின்ற முல்லைநிலத்தைக் கடந்து சென்று, நீரவாளை - நீரில் வாழ்வனவாகிய வாளைமீன்கள், பூவின்வைகும் நீள்பரப்பு நண்ணினார் -
மலர்ப்படுக்கையிலே வதிகின்ற நீண்ட மருதநிலப் பகுதியை அடைந்தார்கள், (எ - று.)
முல்லை நிலத்தைக்கடந்து அதன் அயலதாகிய மருத நிலத்தை எய்தினர் என்க.

     முகில்கள் துளித்தலாலே முல்லை மலரும் முல்லைநிலங்கடந்து, மலர்ப்பள்ளியின்கண்
வாளை மீன்கள் வைகும் வளமுடைய மருத நிலத்தை எய்தினர் என்க. இதன்கண் குறிஞ்சி,
முல்லை, மருதம் மூன்று மயங்குதல் காண்க.

( 227 )