கயல்களும் கண்களும்
8. பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயற் பிறழ்ச்சியு மறாத 1நீரவே.
 
     (இ - ள்.) (இந்நாட்டில்) பங்கயம் - தாமரைகள் ; காடு கொண்டு - கூட்டமாகத்
தழைத்து; அலர்ந்த பாங்கு எலாம் - மலரப்பெற்ற நீர்நிலையின் இடங்களிலெல்லாம்;
செம்கயல் இனம் நிரை - செந்நிறமுள்ள கயல்மீன்களின் கூட்டமான வரிசையானது;
திளைக்கும் செல்வமும் - இனிது மகிழும் சிறப்பும்; மங்கையர் முகத்தன - மகளிரின்
முகத்திடத்தேயுள்ள; மதர்த்த - செழிப்புற்ற; வாள் அரி - ஒளியும் செவ்வரிகளுமுடைய;
அம்
 
     (பாடம்) 1. நுங்கள் போல்வார்.

     கயல் - அழகிய கயல்மீன்கள் போன்ற கண்களினது; பிறழ்ச்சியும் - பிறழ்தலும்;
அறாதநீர - எப்பொழுதும் நீங்காத தன்மையை உடையன, (எ-று.)

     அந்நாட்டகத்தின் பல விடங்களினும் உள்ள நீர் நிலைகளில். தாமரை மலர்கள்
மிகுதியாக மலர்ந்து விளங்குகின்றன. அந்நீர் நிலைகளில் உள்ள மீன்கள் தாமரை
மலர்களின்மீது துள்ளிக்குதித்து விளையாடல் புரிந்து களிக்கின்றன. வீட்டகத்திலோ அழகிய
மாதர்கள் பலர் நிறைந்துள்ளனர். அவர்களுடைய முகங்களோ செந்தாமரை
மலரைப்போன்று திகழ்கின்றன. அவர்களுடைய கண்கள் அடிக்கடி மருண்டு பார்க்கும்
பான்மையுடையவையாகளாக மிளிர்கின்றன. தாமரை மலரில் மீன்கள் துள்ளிக்குதிக்குந்
தோற்றமும், மாதர்முகத்துக் கண்களின் பிறழ்ச்சியும் காண்போர்க்கு ஒரே
தன்மையுடையனவாகக் காணப்பெறுகின்றன. இதனால் அந்நாட்டின் நீர்வளமும் மாதர்களின்
அழகுவளமும் இனிது புலனாகின்றன. மாதர்களின் முகங்கட்குத் தாமரைமலர் உவமை;
அவர்களுடைய கண்களுக்குக் கயல்மீன்கள் உவமை.

( 8 )