விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
800.

புதுநாண் மலர்விண் டுபொழிந் திழியு
மதுநா றுபுனன் மருதத் 1தினைமற்
றிதுகா ணெனவின் னனசொல் லினனே
2விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான்.

      இது முதல், 14 செய்யுள்கள் ஒரு தொடர்.

     (இ - ள்.) புது நாண் மலர் - புதுவதாய் அன்றலர்ந்த மலர்கள், விண்டு பொழிந்து
இழியும் - வாய்நெகிழ்ந்து பொழிதலாலே ஒழுகுகின்ற, மதுநாறு புனல் - தேன்கமழும்
நீர்மிக்க, மருதத்தினை - அம்மருத நிலத்தின்கண் உள்ள வளங்களை, இது காண் என -
இதனைக் காண்பாயாகவென்று திவிட்டனைக்காட்டி, இன்னன சொல்லினனே - இவை இவை
கூறினன், (அவன் யாரெனில்) விதுமாண்மிகு சோதி - திங்கள் மண்டிலத்தின் மாட்சிமை
மிக்க ஒளியை ஒத்து, விளங்கு ஒளியான் - திகழ்தலையுடைய வண்ணத் தானாய விசயன்,
(எ - று.)

     நாள் மலர் பொழியும் தேன் மணம் கமழ்கின்ற நீர் மிக்க மருதம் எய்தியவுடன்
விசயன் அதன் வளத்தைத் திவிட்டனுக்குக் காட்டிக் கூறுவான் ஆயினன் என்க.

     இனி வருவன மருதநில வளம் என்க.

( 228 )