(இ - ள்.) வளம்வாசம் நிலப்பல இன்சுளையும் - செழித்து மணமுடையவாய நிலத்தின்கீழ் வேரிற்பழுக்கும் பலாமரத்தினது இனிய சுளைகளும், இளவாழையின் எழில் அங்கனியும் - இளைமையுடைய வாழையின் அழகிய பழங்களும், களமாங்கனியின் திரளும் - கரிய மாமரத்தின் கனிக்குவியலும், கலவி - ஒன்றுபட்டு, குளம் ஆகிய - பழச்சாற்றின் குளமாக ஆகிவிட்ட நிலங்கள், யோசனை கொண்டன, ஒருயோசனைத் தொலை உடையன, (எ - று.) பலாக்கனி, மாங்கனி, வாழைக்கனி, யாகிய இம் முக்கனிகளும் சிறப்புடைய கனிகள் என்றுணர்க. பலாவின் சுளையும், வாழையின் கனியும், தேமாவின் கனியும் கனிந்தொழுகிய சாற்றாலே, குளமாகி ஒரு யோசனைத் தொலைகிடந்த தென்றான் என்க. களம் - கருநிறம்; இது மாமரத்திற்கு அடை என்க. |