803.

வனமா வினிருங் கனியுண் டுமதர்த்
தினவா ளையிரைத் தெழுகின் றனகாண்
கனவா ழைமடற் கடுவன் மறையப்
புனவா னரமந் திபுலம் புவகாண்.
 

     (இ - ள்.) வனமாவின் இருங்கனி உண்டு மதர்த்து - அழகிய மாமரத்தினது பெரிய
பழத்தைத்தின்று களிப்படைந்து, இனவாளை யிரைத்து எழுகின்றனகாண் - உயர் இனவாளை மீன்கள் ஆரவாரம் உண்டாகப் பாய்வதைப் பார்!, கனவாழை மடல் கடுவன்மறைய -
கனத்த வாழையினது மடலினுள்ளே ஆண் குரங்கு மறைந்து விட்டதாக, புனவானரமந்தி - காட்டில் வாழும் வானரமாகிய பெண்குரங்கு, புலம்புவகாண் - தனித்துப் பிரிவாற்றா மையான் வருந்துவனவற்றைக் காண்க. (எ - று.)

     வாழை மரத்தின் மடலிலே குரங்கு மறைந்த தென்றது நிலவளம் கூறியபடியாம்.

     மாவினது தீங் கனியின் சாறு நீர் நிலைகளிலே ஒழுகுதலால் அதனை உண்டு
கொழுத்த வாளைகள் மதர்த்து ஆரவாரம் உண்டாம்படி பாய்தலையும், வாழைமடலிலே,
ஆண் குரங்கு மறைய, பெண் குரங்கு பிரிவாற்றாது வருந்துதலையும் காண் என்றான் என்க.

     கடுவனுக்குக் காதன் மந்திகள் பல என்பது தோன்றப் புலம்புவ எனப்
பன்மையாலோதினர்.

( 231 )