805.

இவைசெந் நெலிடைக் கருநீ லவன
மவையந் நெலிடைக் கழுநீ ரழுவ
முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு
நவைவென் றனதா மரைநாண் மலரே.
 

     (இ - ள்.) இவை - இங்கே தோன்றுவன, செந்நெலிடை - பைங்கூழின்
இடையேயுள்ள, கருநீலவனம் - நீலோற்பலக்காடுகளாம், அவை - அங்கே தோன்றுவன,
அந்நெல் இடை - அந்நெற்பயிரின் இடையே உள்ள, கழுநீர் அழுவம் - செங்கழுநீர்க்
காடுகளாம், உவை - உங்கே தோன்றுவன, ஒண்துறை - ஒளியுடைய துறைகளின் மருங்கே,
விண்டு ஒளிவிம்ம நகும் - மலர்ந்து சுடர்பெருக நகைக்கும், நவைவென்றன - குற்றமற்றனவாகிய, தாமரை நாண்மலரே - புதிய மலர் நிறைந்த தாமரைக் காடுகளாம், (எ - று.)

     இவை நீலோற்பலக் காடுகள்; அவை செங்கழுநீர்க் காடுகள்; உவை நகுகின்ற
தாமரைக் காடுகள் என்றான் என்க.

( 233 )