816.

துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்
கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன்
பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார்.
 

      (இ - ள்.) துன்னிய துணர் இளம் தோன்றி மென்கொடி - செறிந்த
கொத்துக்களையுடைய இளைதாகிய செங்காந்தளின் மெல்லிய கொடி, மன்னிய வனத்திடை
மலர்ந்து நீண்ட போல் - நிலைபெற்ற காட்டின் ஊடே நீண்டு மலர்ந்து தோன்றிய
காட்சியைப் போல் தோன்ற, காவலன் - பயாபதி வேந்தனுடைய, பொன் இயல் வளநகர் -
அழகிய வளவிய நகரம், பொலிய - பொலிவுற்று விளங்கும்படி, கன்னியர் - மகளிர்கள்,
கைவிளக் கேந்தித் தோன்றினார் - கைவிளக்கங்களை ஏந்தி வந்தனர், (எ - று.)

     காட்டினிடையே பற்பல இடங்களில் செங்காந்தள் பூத்துப் பொலிந்தாற் போன்ற,
மகளிர்கள் அப் படைக் காட்டினூடே கை விளக் கேந்திப் பொலியலாயினர் என்க.
“ஆயிதழ்த் தோன்றி சுடர்கொள் அகலிற் சுருங்குபிணியவிழ“ என்றார் அகத்தினும்.

( 244 )