(இ - ள்.) காவி அம் கருங்கணார் - குவளைமலர்போலும் அழகிய கரிய கண்களையுடைய மகளிர்கள், கமழ ஊட்டிய - மணங்கமழ்தற்பொருட்டு அகில்முதலிய மணப்பொருள்கள் ஊட்டப்பெற்ற, ஆவிஅம் கொழும்புகை - ஆவியாகிய அழகுடைய கொழுவிய மணப்புகையை; தழுவி - தழுவப் பெற்று, ஆய்மலர்க் கோவையங் குழுநிலை மாடம் யாவையும் - ஆராய்ந் தெடுத்த, மலர்மாலை சூட்டப்பெற்றக் கூடி நிற்கின்ற மேல் நிலை மாடங்கள் எல்லாம், பனி பரவிய வரைப்படிவம் கொண்டவே - பனிபடர்ந்து மூடிய மலைகளைப் போன்று தோன்றின, (எ - று.) மேனிலை மாடங்கள் புகைதழுவி வெளிய மலர் மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டு, பனிபரவிய வரைபோன்று தோன்றின என்க. |