818.

மல்லிகை மணங்கமழ் மதுப்பெய் மாலையு
முல்லையம் பிணையலு மொய்த்த 1பூண்கடை
எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் 2வீழ்ந்தன
தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே. 

      (இ - ள்.) மதுப்பெய் மணங்கமழ் மல்லிகை மாலையும் - தேன் துளிக்கின்றனவும்,
மணங் கமழ்கின்றனவுமாகிய மல்லிகை மலர்மாலைகளும், முல்லையம் பிணையலும் -
முல்லைப்பூந்தொடையலும், மொய்த்த - செறிந்த பூண்கடை - அணிகலன் விற்கும் கடைகள்,
எல்இயங்கு இளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன - ஒளி வீசும் இளைய பிறையானது நிலாக்
கற்றைகள் கீழே விழுந்தன வாய், தொல்லைஅம் கடிநகர் - பழையதாகிய அழகிய
காவலமைந்த போதன நகரத்தே, துயில்வபோன்றவே - தூங்கிக் கிடப்பன போன்றன,
(எ - று.)

     பூண் கடையின்கண் வெண்ணிறமுடைய மல்லிகை மலர் மாலைகளும் முல்லைமலர்
குவிந்து கிடக்கும் தோற்றம், இளம்பிறையின் ஒளிக்கற்றைகள் இந்நகரத்தே வீழ்ந்து துயின்று
கிடப்பன போலும் என்க. பூண்கடை - அணிகலன் மலர்மலலை முதலியன விற்கும் கடை
என்க.

( 246 )