823.

என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித்
துன்னிய வனத்துக டுதைந்த வாறென
மன்னவ னருளலு மகர வார்குழை
மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான்.
 

     (இ - ள்.) நும் ஈர் அலர்க் குஞ்சி தம்முள் - உம்முடைய ஈரமுடைய மலர்துதைந்த
மயில் முடியில், இத் துன்னிய வனத்துகள் துதைந்த ஆறு என்னை? என - செறிந்த
வனத்தின்கண் உளதாய இப்பூந்துகள் படிதற்கு வழி யாது? என்று; மன்னவன் அருளலும் -
பயாபதி வேந்தன் கேட்டருளலும், மகரவார்குழைமின் இவர் மணிக்கழல் விசயன்
செப்பினான் - மகரமீன் வடிவினவாய் இயற்றிய நெடிய குண்டலங்களை அணிந்தவனும் ஒளி தவழும் அழகிய வீரக்கழலையுடையவனுமாகிய விசயன் என்பான் கூறுவானாயினான்,
(எ - று.)

     பயாபதி வேந்தன் மக்களை நோக்கி நுங்கள் தலையின்கண் காட்டுப் பூவின் தாதுகள்
காணப்படுமாறென்னை? யென விசயன் விளம்புவான் என்க.

( 251 )