பயாபதியின் கழி பேருவகை

825.

யானுமங் கிவனொடு மடிக 2ளேகினன்
வானுய ரிமகிரி 3மருங்கி லென்றுபூந்
தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந்
தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான்.

     (இ - ள்.) அடிகள் - அடிகேள்!, வான்உயர் இமகிரி மருங்கில் - வான் அளாவ
உயர்ந்த இமயமலையின் சாரலில், யானும் இங்கு இவனொடும் ஏகினன் - அடியேனும்
இத்திவிட்டனோடு சென்றேன், என்று பூந்தேனுயர் அலங்கலான் சிறுவன் செப்பலும் - என்றின்னணம் அழகிய தேன்மிக்க மாலையையுடைய விசயன் கூறியவுடனே, தான் உயிர் தளிர்ப்பதோர் சவியன் ஆயினான் - அரசன் தன் உயிர் இன்பத்தால் தழைக்கத் தகுந்த ஓர் ஒளிபடைத்தவன் ஆனான், (எ - று.)

    திவிட்டனோடே அடியேனும் சென்றேன் என்று விசயன்கூற, அவ்வெற்றியைக் கேட்டுப்
பயாபதி விம்மிதமடைந்தான் என்பதாம்.

( 253 )