(இ - ள்.) சுடர் ஒளிமிகு சோதிசூழ் கழற் காளைமார் - சுடரும் ஒளிமிக்க கதிர்கள் சூழ்ந்த வீரக்கழலை அணிந்த விசயதிவிட்டர்கள், தம் அடர் ஒளி முடிமன்னன் ஏவலான் - தம் தந்தையாகிய, செறிந்த ஒளியை யுடைய முடிமன்னனாகிய பயாபதி வேந்தனுடைய ஏவல்பெற்று, ஆய்பொன் நாகம் தொடர் ஒளிசுடர் - ஆராய்ந்த பொன்மலையை ஒப்பத்தொடர்ந்து ஒளிவீசுகின்ற, ஞாயில் சூளிகை சூழும் நெற்றி - குருவித்தலை, உப்பரிகை முதலிய மதிலுறுப்புக்கள் சூழந்த உச்சியினையுடையனவும், படர்ஒளி நெடுவாயில் - படருகின்ற ஒளியையுடையனவுமாகிய நிண்ட வாயில்களையும் உடைய, பள்ளியம்பலங்கள் சேர்ந்தார்,-பள்ளிமன்றங்களை எய்தினார், (எ- று.) பள்ளியம்பலம் - துயிலுதற்குரிய மன்றம். பின்னர் நம்பிமார் பயாபதி மன்னன்பால் விடைபெற்று, நெடிய வாயிலையுடைய பள்ளி மன்றங்களை எய்தினர் என்க. |