(இ - ள்.) வான்உற்ற குழவித்திங்கள் - விசும்பிற்பொருந்திய பிறைத்திங்கள், முழை அகட்டுப்போந்து - குகையின் வயிற்றுள் புகுந்து, ஒளிமுற்றுவான் - ஒளிமுதிரும் பொருட்டு, முளைத்தபோலும் - இரண்டுருவாக முளைத்ததைப் போன்ற, எயிறு உடைமூரிச் சிங்கம் - பற்களையுடைய பெரிய சிங்கத்தை, மற்று அம்மால் அழித்தது எல்லாம் - அத்திவிட்டன் கொன்ற வரலாற்றை எல்லாம், வானம் ஆறாகச் சென்ற - விசும்பு வழியாகப் போன, ஒற்றனால் உணர்ந்து - தன் ஒற்றன் ஒருவனால் அறிந்து கொண்டு, வேந்தன் - சடிமன்னன், உவகையங்கடலுள் ஆழ்ந்தான் - இன்பக்கடலுள் மூழ்கினான், (எ - று.) சடிமன்னனால் ஏவப்பெற்ற ஒற்றன் திவிட்டநம்பி அரிமாவைப் பிளந்து கொன்ற செய்தியை அறிந்து வந்து சடிமன்னனுக்குக் கூறச் சடி மிகவும் மகிழ்ந்தான் என்க. |