(இ - ள்.) களியவாய் விலங்கி நீண்டு - கரிய நிறமுடையனவாய் விலகி நீளியவாய், களிக்கயல் இரண்டு தம்முள் - களிப்புடைய இரண்டு கயல்மீன்கள் தம்முள் எதிர்ந்து, பொரிய - போர்செய்தற்கு, போகின்ற போலும் - செல்வதை நிகர்த்த, பொங்கு அரி தடம் கண் பேதைக்கு - மிக்க செவ்வரிபடர்ந்த அகன்ற கண்களையுடைய சுயம்பிரபையை, உரிய மாலவற்குச் சென்று கொடுப்பன் என்று - மணம்புணர்தற்கு உரியவனான திவிட்டனுக்கு அழைத்துக் கொடுபோய் மணம் செய்யக் கொடுத்திடுவேன் என்று, உலகம் காக்கும் பெரியவன் - உலகத்தைக் காவல்செய்யும் பெருமையுடைய சடிவேந்தன், தமரோடு எண்ணி - தன் அமைச்சரோடு ஆராய்ந்து தெளிந்து, கடிவினை - மணவினைக்குரிய செயல்களை, பெருக்கலுற்றான் - செய்யத் தொடங்கினான், (எ - று.) பொரிய - பொர; போர்செய்ய. அரி - வரி. பேதை - சுயம்பிரபை. பெரியவன் - சடி. தமர் - அமைச்சர் முதலியோர். கடிவினை - திருமணச் செயல். |