(இ - ள்.) கண்நிலாம் கவின் ஒளிக் காளைமார் திறத்து - காண்போர் கண்ணில் நின்றுநிலவும் அழகொளியையுடைய இளைஞர்களாகிய விசயதிவிட்டர் பொருளாக; உள்நிலாம் எழுதரு காம ஊழ் எரி - தம் உள்ளத்தே தோன்றி எழுகின்ற காதலாகிய ஊழித் தீயானது; எண்இலாச் சுடர் சுட விரிந்தும் - கணக்கற்ற சுடர்களைக்கொண்டு சுடுமாறு பரவியெழுந்தும்; நாண் விடா - வெட்கத்தினை விடாத; பெண்ணலால் உயிர் பெரியது - இப்பெண் களின் உயிரினும் சிறந்த உயிர்; பிறிது இல்லை - மற்றொன்றில்லை. (எ - று.) விசய திவிட்டர்களிடத்திலே மங்கையர்க்கு உண்டாகிய காமத்தீயானது மிகுதியாகப் பரவியெழுந்தும் அம்மங்கையர்கள் தங்கட்குரிய நாணத்தினை விடாமலே உயிரினைத் தாங்கியிருக்கின்றனர். இதனால் அம்மங்கையரது மனத்திண்மையுங் கற்புநலமும் எளிதிற் புலனாம். |