(இது தொடங்கி எட்டுச் செய்யுள் ஒருதொடர்) குளகம். (இ - ள்.) இளர்ஒளி மாடக்கோயில் - ஒளிவீசும் மாடங்களையுடைய தன் அரண்மனையின்கண், கின்னரர் கெழுவல் ஓவா - கின்னரர்கள் வந்து நெருங்குதலை ஒழியாத, வளர் ஒளி வயங்கு தோன்றல் - வளர்கின்ற புகழாலே திகழ்தலுடைய பெரியோன், வருத்தமானத்து மன்னன் - வருத்த மானம் என்னும் நாட்டினை ஆளும் அரசனும், உளரொளி உமிழும் பூணான் - சலித்தற்றன்மையுடைய ஒளிவீசும் அணிகலன்களையுடையவனும், பிரீதிவர்த்தனன் என்று ஓதும் - பிரீதிவருத்தனன் என்று புகழ்ந்து கூறப்படுபவனும், தளிர் ஒளி தயங்குமேனி - தளிர்போன்ற ஒளிதிகழும் திருமேனியை உடையவனும், தாமரைச் செங்கணானும் - செந்தாமரைபோலச் சிவந்த கண்களையுடையவனும். ஒளிமேனியையும், செங்கண்ணையும், பூணையும், கின்னரர் கெழுவ லொழியாத கோயிலையும், உடைய வருத்தமானத்து மன்னனாகிய பிரீதி வருத்தனனும், என்க. |