2. விருக கடி வேந்தன்

831.

மண்ணலங் கனியுஞ் 1சாதி மணிமுழா வதிரு மாடக்
கண்ணலங் கனியுந் தோன்றல் 2கந்தர்வ நகரங் காப்பான்
விண்ணலங் கனியுஞ் சீர்த்தி 3விருகவெல் கடிகொள் பேரான்
பெண்ணலங் கனியு நீர்மை பெருகிய வுருவத் தோளான்..

      (இ - ள்.) பெண்ணலம் கனியும் நீர்மை - பெண்மையாகிய நலத்தைக் கனிந்து
ஒழுகச்செய்யும் தன்மையையும், பெருகிய உருவத் தோளான் - மிக்க எழிலையுமுடைய
தோளையுடையவனும், மண் நலம் கனியும் - மார்ச்சனை பூசப்பட்டு இசையின்பங் கனிகின்ற,
சாதி மணி முழா - உயரிய மணிகளால் அழகுறுத்தப்பட்ட மத்தளம், அதிரும் மாடம் -
முழங்குகின்ற மாடங்களையுடைய, கந்தர்வ நகரம் காப்பான் - கந்தருவ நகரத்தைக் காவல்
செய்யும் அரசனும், கண்ணலம் கனியும் தோன்றல் - கண்ணோட்டம் மிகுந்த பெரியோனும்,
விண்நலம் கனியும் சீர்த்தி - வானுலகத்தினும் நன்மை பேசப்படுகின்ற புகழுடையோனும்
ஆகிய, விருக வெல்கடிகொள் பேரான் - விருககடி என்னும் வெற்றியுடைய பெயர் பூண்ட
அரசனும், (எ - று.)
உருவத் தோளானும், தோன்றலும், கந்தருவ நகரக் காவலனும். சீர்த்தியோனும், ஆகிய
விருககடியும், என்க.

( 5 )