3. திவாகரன்
832.

பூமரு பொலங்கொள் சோலைப் பொன்னணி புரிசை வேலிக்
காமரு கபாட வாயிற் கந்தமா தனத்தைக் காப்பான்
தேமரு திலதக் கண்ணித் திவாகர தேவ னென்பான்
தாமரை தயங்கு சோதித் தாரணி துரகத் தேரான்.

     (இ - ள்.) பொங்கொள் பூமருசோலை - பொன்னிறமான மலர்கள் நிரம்பிய
சோலைகளாற் சூழப்பட்ட, பொன் அணி புரிசை வேலி - பொன்னாலியன்ற அழகிய
மதில்களை வேலியாகவுடையதும், காமரு கபாடவாயில் - விருப்பத்தைச் செய்கின்ற
கதவுகளையுடைய தலைவாயில் அமைந்ததும் ஆகிய, கந்தமாதனத்தைக் காப்பான் -
கந்தமாதனம் என்னும் நகரத்தைக் காவல் செய்பவனும், தயங்கு சோதி தாமரைத் தார்
அணி - திகழ்கின்ற ஒளியையுடைய பொன்தாமரை மலர்மாலை அணிந்த,

    துரகத்தேரோன் - குதிரை பூட்டிய தேருடையோனும், தேமரு திலதம் கண்ணி
திவாகரதேவன் என்பான் - தேன் துளும்பும் சிறந்த முடிமாலையணந்தவனும் ஆகிய
திவாகரதேவனும், (எ - று.)

     கந்தமாதனத்துக் காவலனும், தேரானும் ஆகிய திவாகரதேவனும், என்க.

( 6 )