(இ - ள்.) கார் அணங்கு உருவமேகம் - கரிய அழகுடைய உருவம்பெற்ற முகில், கருவுகொண்டு - கருக்கொண்டு முதிர்ந்து, அதிர்ந்து - தம்மேற்கிடந்து முழங்காநிற்ப, வெய்யோன்தேர் அணங்குறுக்கும் மாடம் - கதிரவனுடைய தேர்ச்செலவைத் தடைசெய்யும் மாடங்களையுடைய, தேவரவணத்துச் செல்வன் - தேவரவணம் என்னும் நகரத்தரசன், ஏர் அணங்குறுக்கும் - இயற்கை எழிலை மேலும் அழகுறச்செய்யும், பைந்தார் -பசிய மாலையை அணிந்த, இரமியதரன் என்று எங்கும் - இரமியதரன் என்று யாண்டும், சீர் அணங்குறுக்கும் செய்கை - தன் புகழை அழகுபடுத்தும் நற்செய்கையையுடைய, செஞ்சுடர்த் திலகப்பூணான் - செவ்விய ஒளியுடைய உயரிய அணிகலன்களையுடையவனும், (எ - று.) தேவரவணத்தை ஆளும் மன்னனும், பைந்தாரினனும், திலகப் பூணானும் ஆகிய இரமியதரனும், என்க. அதிர்ந்து - அதிர. |