(இ - ள்.) கண்நிலாங் கனக மாடம் - கட்பொறியைத் தன்பால் நிலவச்செய்யும் எழிலுடைய பொன்னாலியன்ற மேனிலை மாடத்தின்மிசை, கதலிகை - கொடிகள், முகிலோடு ஆடி - மேகங்களோடு ஆட, விண்ணிலா - விசும்பின் கண்ணதாகிய திங்கள், இருண்டு தோன்றும் - இருள் உடையதாய்த் தோன்றுதற்குக் காரணமான, விசயகூடத்து மன்னன் - விசய கூடம் என்னும் நகரத்திற்கு அரசனும், வெண்ணிலா விரிந்த பூணான் - வெள்ளொளி பரந்த முத்தினாலியன்ற அணிகலன்களையுடையானும், நீள்முந்நீர் மண்ணெலாம் வணங்க நின்ற - நீண்ட கடல் சூழ்ந்த மண்ணுலக மெல்லாம் வணங்கும்படி சிறந்து நின்றவனும், மழகளிற்று அரசோடு ஒப்பான் - ஐராவதத்தையுடைய இந்திரனை ஒப்பவனும், வேகமாரதன் - வேகமாரதன் என்னும் பெயரையுடையானும், ஆகிய, (எ - று.) விசய கூடத்து மன்னனும், பூணானும் இந்திரன் ஒப்பானும் ஆகிய வேகமாரதனும், என்க. |