(இ - ள்.) என்று இவர் எண்மர் தம்மை - என்று இன்னணம் புகழப்பட்ட இவ்வரசர் எண்மரையும் அழைத்து, நீர் - நீயிர், இரதநூபுரத்துள் ஆனா நின்றுகாமின் என்று - இவ்விரதநூபுரத்துள் இருந்து ஒழியாது இந்நாட்டைக் காவல் செய்யுங்கோள் என்று பணித்து, நிறீஇயபின் - அவரை அங்ஙனமே அமைத்த பின்னர், நீதிமன்னன் - இரதநூபுரந் நகரத்தில் வீற்றிருந்த செங்கோல் மன்னன் ஆகிய அச்சடி மன்னன்; ஒன்றிய உலகம் எல்லாம் ஒருங்குடன் விழுங்கலுற்று - பொருந்திய உலகம் முழுவதையும் எஞ்சாமல் விழுங்குதற்பொருட்டு, சென்று உயர்கடலோடு ஒக்கும் - பெருகிப் படர்ந்து எழுகின்ற ஊழிக்காலத்துக் கடலையே நிகர்க்கும், சேனை - தன் படைகளை, பண் அமைக்க என்றான் - ஒப்பனை செய்க என்று கட்டளையிட்டான், (எ - று.) என்ற இவ்வெண்மரையும் அழைத்துத் தன் அரசு காவலை அவர் பால் வைத்துக் காமின் என்று நிறுவிய பின்னர், கடலொடு ஒக்கும் தன் சேனையைப் பண்ணுறுத்துக என்றான், என்க. |