(இ - ள்.) வெண்ணிலாக் குழவித்திங்கள் - வெள்ளிய நிலாவொளி வீசும் இளம் பிறையை, மேகத்துப் பதித்தபோலும் - முகிலின்கட் பதித்துவைத்ததைப் போன்ற, ஒண்ணிலா உருவக் கோட்ட - ஒள்ளிய நிலவொளி வீசும் அழகிய கோடுகளையுடைய, ஓடைமால் களிற்றின் - முகபடாம் அணிந்த பெரிய யானைகளின், மேலோர் - எருத்தத்தின் மேல் இருந்து நடத்தும் பாகர்கள், பண் எலாம் அணிந்து தோன்றப் பருமித்து - பண்பாடுகள் அனைத்தும் அழகுற்றுத் தோன்றுமாறு யானைகளை ஒப்பனை செய்து, கருவியேற்றி - யானைமேலிருந்து போர்செய்தற்குரிய கருவிகளையும் அங்குசம் கோடரி முதலிய நடத்தும்கருவிகளையும் அவற்றின் மிசை ஏற்றி, கண்நிலாம் பதாகையேற்றி, காண்பார் கண்களைத் தம்பாலே நிலவச்செய்யும் அழகுடைய கொடிகளையும் மேலேசேர்த்து, காழ்அகில் கழும விட்டார் - நிறம் அமைந்த அகிற்புகை சூழப் புகைத்தனர், (எ - று.) அகில் புகைத்தல் கண்ணேறு கழித்தற் கென்க. பண் - ஒப்பனை. கோட்ட - கோட்டை உடைய. பருமித்து - ஒப்பனை செய்து. காழகில் - வைரமுடைய அகிற் புகை. கருவி - தோட்டி முதலியன. இது யானை பண்ணுறுத்தியது கூறிற்று. |