புரவி பண்ணுறுத்தல்
840.

1கட்டிய கம்மச் செய்கைக் கதிர்மணிக் கனகச் சூலம்
பட்டமொ டிலங்கப் பண்ணிப் பக்கரை பதைப்ப 2யாத்து
மட்டவி ழலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னாற்
கொட்டிய 3குரத்த வாலித் தெழுந்தன குதிரைச் சேனை.
 

      (இ - ள்.) கம்மம் செய்கை கட்டிய - கம்மத்தொழிற்றிறன் தோன்ற இயற்றப்பட்ட,
கதிர்மணி கனகச்சூலம் - ஒளிருகின்ற மணிகளையுடைய பொன்னாலியன்ற சூலவடிவிற்றாய
தலையணியை, பட்டமொடு இலங்கப் பண்ணி - நெற்றிப்பட்டத்தினோடே சேர விளங்கும்படிபண்ணுறுத்து, பக்கரை பதைப்ப யாத்து - பக்கரைகளை அசையக்கட்டி, மட்டு அவிழ்
அலங்கல் வீரர் - தேன்துளிக்கும் தொடையலணிந்த குதிரைப்படை மறவர்கள், சேரலும் -
எய்துதலும், முன்னால் வலத்துக் கொட்டிய குரத்த - முன்னர் வலக்கால் எடுத்து ஒலிப்ப
மிதித்த குளம்புகளை யுடைய, குதிரைச் சேனை - குதிரைப்படைகள், ஆலித்து எழுந்தன -
ஆரவாரித்துப் புறப்பட்டன, (எ - று.)

     கொட்டுதல் - அதிர அடியிடுதல். வலக்காலை முன்னர் எடுத்திடுதல் குதிரையின்
நல்லிலக்கணச் செயல். சூலம் - சூலவடிவிற்றாய குதிரையின் தலையணி இது புரவி
பண்ணுறுத்தமை கூறிற்று.

( 14 )