மறவர்களின் பண்பாடு
842.

ஒட்டிய 1கலிங்கத் தாண்மேற் றிரைத்துடுத் துருவக் கோடிப்
பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டைய நரல வீக்கிக்
கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர்
மட்டுய ரலங்கல் சூடி மறங்கிளர் மள்ளர் சூழ்ந்தார்.

      (இ - ள்.) தாள்மேல் ஒட்டிய கலிங்கம் திரைத்து உடுத்து - கால்களின் மேல்
ஒட்டப்பட்டதுபோல் பொருந்திய ஆடையைத் திரைத்துக்கட்டி, உருவம் கோடிப் பட்டிகை
பதைப்ப யாத்து - அழகிய விளிம்புகளையுடைய அரைக்கச்சினை அசையக் கட்டி,
பரட்டையம் நரலவீக்கி - பரட்டையம் என்னும் ஒட்டுச்சல்லடத்தை ஆரவாரிக்கும்படி கட்டி,
கட்டிய கழலர் - வீரக்கழலணிந்தவராய், தாரர் - பூமாலையணிந்தவராய், கதிரொடு
கனலும் வாளர் - ஒளி வீசிச் சினக்கும் வாள் ஏந்தியவராய், மட்டுயர் அலங்கல் சூடி, தேன்
மிக்க மாலைகளைப் புனைந்து, மறங்கிளர் மள்ளர் - வலிமைமிக்க போர்மறவர், சூழ்ந்தார் -
வந்து குழீஇயினர், (எ - று.)

     பரட்டையம் - தொடுதோல் என்பாருமுளர், கலிங்கந் திரைத்துடுத்து, பட்டிகை யாத்து,
பரட்டையம், நரலவீக்கி, கழலர், தாரர், வாளராய் மள்ளர் சூழ்ந்தார், என்க.
கோடிப்பட்டிகை - புதுப்பட்டிகையுமாம், பட்டிகை - அரைக் கச்சு

( 16 )