(இ - ள்.) அம் கலம் மலர்ந்த தோன்றல் - அழகிய அணிகலன்கள் திகழ்கின்ற பெரியோனும், அரிபுரத்தவர்கள் கோமான் - அரிபுரம் என்னும் நகரத்தார்க்கு வேந்தனும், பைந்தார் - பசிய மாலையை அணிந்தவனும், புலி பொலங்கொள் தேர் பெயர்கொள்வோன் - புலியும் தேரும் சேர்ந்துண்டாகிய வியாக்கிரரதன் என்னும் பெயரையுடையவனும், மங்கலக்களிற்றினான் தன் மருமகன் - நன்மை மிக்க யானைகளையுடைய சடிமன்னனின் மருகனும் ஆகிய மன்னன், மகரமுந்நீர்தங்கு ஒலிமிகுந்த தானையொடு - மகரமீன்களையுடைய கடலினது ஒலியினும் பார்க்க மிக்கொலிக்கும் படையோடு, கதிர் எறிப்பச் சார்ந்தான் - சோதி திகழும் படி அப்படைகளுடன் வந்து கூடினான், (எ - று.) புவி - வியாக்கிரம். தேர் - ரதம். புலிதேர் பேர்கொள்வோன் வியாக்கிரரதன் என்க. சடியின் மருமகனாகிய அரிபுரத்தரசன் வியாக்கிரரதன் என்பான் பெரிய படையோடே வந்தான், என்க. களிற்றினான்-சடிமன்னன். |