சடிமன்னன் வானஊர்தி இயற்றல்

846.

சேனைபண் ணமைத்துச் சென்று திருக்கடை செறிந்த போழ்திற்
றானையுள் படுநர் மாண்பிற் றாரவற் றொழுது கூற
வேனவிற் றடக்கை வேந்தன் விண்ணியல் விமான மொன்று
வானவில் லுமிழ்ந்து மின்ன மனத்தினா னிருமித் திட்டான்.

     (இ - ள்.) சேனை பண் அமைத்துச் சென்று - இங்ஙனம் படை ஒப்பனை
செய்யப்பட்டுப்போய், திருக்கடை செறிந்த போழ்தில் - அரண்மனை வாயிலிற்
கூடியவுடனே, மாண்பின் தாரவர் - மாட்சிமையுடைய மாலையணிந்தவரும், தானையுள்படுநர்
- படையுள் இருந்து தொழில் செய்வோரும் ஆகிய தூதுவர்கள், தொழுதுகூற - சடியரசனை
வணங்கிச் சொல்ல, வேல்நவில் தடக்கை வேந்தன் - வேற்படையை ஏந்திய பெரிய
கையையுடைய சடியரசன், விண் இயல் விமானம் ஒன்று - விசும்பில் இயங்கும் இயல்
புடையதொரு விமானத்தை, வானவில் உமிழ்ந்து மின்ன - வானவில்லைப்போன்று பல்வேறு
ஒளிகளையும் பரப்பி மின்னும்படி, மனத்தினால் நிருமித்திட்டான் - மனத்தினால் நினைத்த மாத்திரையானே படைத்தான், (எ - று.)  

    வானவில் உமிழ்ந்து மின்ன - இந்திர வில்லைப்போல் பல்வேறு ஒளிகளை வீசி மின்ன
என்க. சடியரசன் விஞ்சையனாகலின் நினைப்பி னாலேயே விமானத்தைத் தோற்றுவித்தான்
என்க. தான் கருதிய வண்ணம் எனினுமாம்.

( 20 )