(இது முதல் 9 செய்யுள்கள் விமானத்தின் சிறப்புக்கூறும் ஒரு தொடர்) (இ - ள்.) பாரித்த பவழம் திண்கால் - பருத்த பவழத்தாலியன்ற திண்ணிய கால்களையும், பளிங்குபோழ் பலகைதன் மேல் - பளிங்கு அரிந்து இயற்றிய பலகைகளின்மேல், பூரித்த சுடரின் செம்பொன் போதிகை - நிறைத்த ஒளியுடைய பொன்னாலியன்ற குறுந்தறிகளையும் உடையதாய், புடங்கடோறும் - நுனிகள்தோறும், மூரித்தண் சுடர்வெண்முத்தின் பரூஉத்திரள் முயங்கி ஞால - பெரிய குளிர்ந்த வெள்ளொளியையுடைய முத்தின் மாலைகளானாய பருத்த தொங்கல்கள் பொருந்தித் தூங்க, வேரித்தண் துவலை கால மாலைகள் விசித்தவன்றே-மண முடைய குளிர்ந்த தேன்துளிக்கும்படி மாலைகள் கட்டப்பட்டுள்ளன, (எ - று.) அவ்விமானம், பவழத் தூண்களையுடையதாய்ப் பளிங்குப் பலகையின் மேல் பொன் போதிகை பொருந்திய நுனிகளில் முத்துமாலைகள் தூங்கவிடப் பட்டதாய் மலர் மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டதென்க. |