855.

செம்பொனங் கனியிற் செய்து சித்திரந் 2தெளிப்பத் தீட்டி
வம்பவெண் முத்தச் சாந்தின் மட்டித்து மணிக ளெல்லாம்
நம்பிய வொளிய வாகத் தெளித்துநன் கெழுதப் பட்டுத்
தம்புலந் தெரிந்து தோன்றுந் தடத்தின தலங்க ளெல்லாம்.

     (இ - ள்.) தலங்கள் எல்லாம் - அவ்விமானத்தின் உள்ளிடங்கள் எல்லாம்,
செம்பொன் அங்களியிற் செய்து - செவ்விய பொன்னை உருக்கிய குழம்பால்
பூசுதலைச்செய்து, சித்திரம் தெளிப்பத்தீட்டி - ஓவியங்கள் விளக்கமாக வரையப்பட்டு, வம்ப
வெண்முத்தச் சாந்தின் மட்டித்து - புதுமையான வெள்ளிய முத்துச்சுண்ணத்தால் மெழுகி,
நம்பிய ஒளியவாக - விரும்பத் தகுந்த ஒளியுடையனவாக, தெளித்து - விளக்கி, நன்கு
எழுதப் பட்டு - நன்றாகக் கோலமிடப்பட்டு, தம்புலம் தெரிந்து தோன்றும் - தம் பகுதிகள்
எல்லாம் விளக்கமாகத் தோன்றுகின்ற, தடத்தின - பெருமையுடையன, (எ - று.)

     அவ்விமானத்துள் தளங்கள் பொற்குழம்பு பூசிக் கோலமெழுதி முத்துச் சுண்ணம்
கலந்த சந்தனச் சேற்றாலே மெழுகி விளக்கமுடைத்தாய பெருமை யுடையன என்க.

( 29 )