(இ - ள்.) அயல எல்லாம் - அவ்வுள்ளிடத்தின் பக்கங்களில் அமைந்தவை எல்லாம், பாடகம் இலங்க - பாடகம் என்னும் காலணி திகழ, செங்கேழ் - சிவந்த நிறமுடைய, சீறடி - சிறிய அடிகளையும், பரவை அல்குல் - பரந்த அல்குற்றடத்தையும் உடைய, நாடக மகளிர் - கூத்தியன் மடந்தையர், ஆடும் நாடக அரங்கும் - ஆடுதற்கிடமாகிய கூத்தாட்டரங்கும், மாடு அகம் தெளிப்ப நன் பொன்வேய்ந்த - பக்கங்களும் உள்ளிடமும் விளக்கமுறும்படி நல்ல பொன்னால் வேயப்பட்ட, மண்டபத்தலமும் - மண்டபமாகிய இடங்களும், வண்ணம் ஆடகம் அணிந்த கூடநிலைகளும் - நிறமுடைய பொன்னால் அழகுறுத்திய அறையிடங்களுமே யாகும், (எ - று.) அவ் விமானத்துள் நாடக அரங்கும், மண்டபங்களும், கூடங்களும் உள்ளன என்க. |