அரசன் உறங்குதல்

86. மஞ்சுடை மணிநகு மாலை 1மண்டபத்
தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்
பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
செஞ்சுட ரிரிவதோர் 2திறத்த னாயினான்.
 

     (இ - ள்.) மஞ்சு உடை - உயரத்தினாலே முகில்களைச் சிதறச் செய்வதும்; மணி நகு
- மணிகள் விளங்கப் பெற்றதும்; மாலை - பூமாலைகள் தொங்க விடப்பெற்றதும் ஆகிய;
மண்டபத்து - மண்டபத்தின் கண்ணே; அகில்புகை அளைந்து - அகிற்புகை ஊட்டப்பெற்று;
தேன் அளாய் - மேலே பரப்பப்பெற்ற மலர்களால் தேன் பொருந்தி, பஞ்சு
உடை - உள்ளே பஞ்சையுடையதான; அம்சுடர் அமளிமேல் - அழகிய ஒளியுள்ள
படுக்கையின்மீது; பள்ளி ஏற்பவன் - உறக்கம் கொள்பவனாக இருந்தவன் அப்போது;
செம்சுடர் இரிவது ஓர் திறத்தன் ஆயினான் - செந்நிறமான ஒளியையுடைய கதிரோனும்
தோற்றோடும்படியான ஒளியுடையவனாக இருந்தான். (எ - று.)

     இச்செய்யுளால் அரசன் உறங்குகையிலும் அவனிடமிருந்து தெய்வ வொளி
வெளியாதலைக் கூறினார். கோடாத செங்கோல் மன்னர்கள் உறங்குகையில்
அவர்களிடமிருந்து தெய்வவொளி வெளிப்பட்டு அவ்வொளி உலகினைக் காவல்புரியும்
என்பது நூற்கொள்கை. “உறங்குமாயினும் மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை
வையகங் காக்குமால்“ என்றார் திருத்தக்கதேவர். மஞ்சுடை என்பதற்கு அழகுடைய என்று
பொருள் கூறினும் பொருந்தும்.

( 17 )