860.

மாகமலை யன்னமணி மாடநிலை யுள்ளாற்
போகமிகு பூந்தவிசின் மீதுபுதை வுற்ற
வாகைவள மாலைபுனை மன்னன்மகள் செல்வாள்
மேகபட லத்திடை மினற்கொடியொ டொத்தாள்.
 

      (இ - ள்.) வாகை வனம் மாலை புனை மன்னன் மகள் - அழகிய வெற்றிமாலையை
அணிந்த சடியரசனுடைய மகளாகிய, போகம் மிகு பூந்தவிசின்மீது புதைவுற்ற மகள் -
இன்பம்மிக்க பூவணையின்மேல் வீற்றிருந்த சுயம்பிரபை, மாகம்மலையன்ன மணி மாடம்
நிலையுள்ளால் - விசும்பை அளாவியுயர்ந்த மலையை ஒத்த அழகிய மேனிலைமாடத்தின்
ஊடே, செல்வாள் - இயங்குகின்றவள், மேக படலத்திடை - முகிற்குழாத்தின் ஊடே
இயங்கும், மினற்கொடியொடு ஒத்தாள் - கொடிமின்னலை ஒப்பத் தோன்றினாள், (எ - று.)

     மன்னன்மகள், மாடமிசைச் செல்வாள், மேகபடலத்திடை மின்னற் கொடியை ஒத்தாள் என்க.

( 34 )