(இ - ள்.) மௌவல்மலர் வேய்ந்து - முல்லைமலர் சூடப்பெற்று, மதுநாறும் - தேன்கமழ்கின்ற, மணிஐம்பால் - நீலமணிச் சுடர்க் கற்றையை ஒத்த அளகத்தையும், கொவ்வை துயில் கொண்ட - கொவ்வைக்கனிகள் படுத்துறங்குதல் போன்ற அதரங்களையும், துவர்வாய் - பவளம்போன்று சிவந்த வாயையும் உடைய, கொடியொடு ஒப்பாள் - பூங்கொடிபோன்ற சுயம்பிரபை, தெய்வமணம் நாறும் - தெய்வத்தன்மையுடைய மணங்கமழும திருமேனி புறங்காக்கும் அவ்வையரொடு - அழகிய தனது திருமேனியைப் பக்கத்தேயிருந்து காவல்செய்யும் செவிலித்தாயரொடு, எய்தி - சென்று, முதல் அவ்வையடி சேர்ந்தாள்-தன் நற்றாயின் திருவடிகளை அடைந்தாள், (எ - று.) மலர்வேய்ந்து மதுநாறும் ஐம்பாலையும், கொவ்வை துயில்கொண்ட வாயையும், உடைய கொடியொப்பாள் செவிலித் தாயரோடே சென்று தன் நற்றாயை வணங்கினள்; என்க. |