சுயம்பிரபையின் வருகை
வேறு

865.

செம்பொனணி சீரியன சேரினிடை நோமென்
றம்பொனணி நொய்யன வணிந்தலர் மிலைச்சி
வம்பினணி வாட்கணிடை மைபிறழ வைத்துக்
கொம்பினனை யாள் 2குளிரு மாறுகுயில் வித்தாள்.
 

      (இ - ள்.) சீரியன செம்பொன் அணிசேரின் - சிறந்த திண்மை யுடையனவாகிய
செம்பொன்னாலியன்ற வல்லணிகலன்கள் அணியப்பெற்றால், இடைநோம் என்று -
சுயம்பிரபையின் மெலிந்தொல்கும் சிற்றிடை வருந்து மென்றுகொண்டு, அம்பொன்
அணிநொய்யன அணிந்து - அழகிய பொன்னாலாகிய மென்மை மிக்க அணிகலன்களையே
அணிந்து, அலர்மிலைச்சி - மலர்மாலை சூட்டி, வம்பின் அணி வாட்கண் இடை -
புதுமையால் அழகுற்றுத் திகழும் வாள்போன்ற கண்களின் இடையே, மை பிறழவைத்து -
மை ஒளிரத் தீட்டி, கொம்பின் அனையாள் - பூங் கொம்பை ஒத்த சுயம்பிரபை, குளிருமாறு
- உளம் மகிழும்படி, குயில்வித்தாள் - ஒப்பனை செய்தாள், (எ - று.)

     செம்பொன்னாலாய வல்லணிகள் அணிந்தால் பொறாது நுண்ணிடை நோமென்று
கருதி, நொய்ய பொன்னணியே அணிந்து, அலர் மிலைச்சி, வாட்கண்ணிடை மைதீட்டிக்
குளிருமாறு ஒப்பனை செய்தாள் என்க.

 ( 39 )