867.

தொண்டைதொலை வித்ததுவர் வாய்மகளிர் சூழக்
2கண்டுவளர் தாயரொடு 3கஞ்சுகியர் காப்ப
விண்டுவளர் சோதிகொள் விமானமது சேர்வாள்
வண்டுவளர் கற்பமுறை வான்மகளொ டொத்தாள்.

     (இ - ள்.) தொண்டை தொலைவித்த துவர்வாய் மகளிர் - கொவ்வைக் கனியைத்
தோற்கச்செய்த பவளவாய் மகளிர் பலர், சூழ - தன்னைச் சூழ்ந்து வரவும், கண்டுவளர்
தாயரொடு - வளர்த்தற்குரிய செயல்களை நன்குகண்டு தன்னைவளர்த்த செவிலித்
தாயாருடனே, கஞ்சுகியர் - மெய்ப்பைபுக்க முதியரும், காப்ப - காவலைச்செய்து போதவும்,
விண்டுவளர் சோதிகொள் - தோன்றிவளர்தலையுடைய ஒளிமிக்க, விமானமது -
விமானத்தை, சேர்வாள் - அடைகின்ற சுயம்பிரபை, வண்டுவளர் கற்பமுறை வான்மகளொடு
ஒத்தாள் - வண்டுகள் இசைவளர்க்கும் கற்பலோகத்தின் கண்ணே வதிகின்றதொரு தெய்வப்
பெண்ணைப்போன்று திகழ்ந்தாள், (எ - று.)

     மகளிர் சூழத் தாயரோடே, கஞ்சுகியர் காப்ப, விமானம் ஏறுகின்றவள், வான்மகளை
ஒத்தாள், என்க.

( 41 )