868.

1முன்னிமுடி வித்தமிகு விஞ்சையின் முதிர்ந்தார்
அன்னநடை யாட்கடிமை யார்வமொ டடைந்தார்
பின்னிவிடு கூந்தலர் பிடித்தவயில் வாளர்
கன்னியரி ராயிரவர் கன்னிபுடை காத்தார்.

      (இ - ள்.) முன்னி முடிவித்த - மேற்கொண்டு முழுதுறப் பயின்று முற்றிய, மிகு
விஞ்சையின் முதிர்ந்தார் - மேலான வித்தையில் மேம்பாடுற் றவரும், அன்னநடையாட்கு -
அன்னம் போலும் நடையையுடைய சுயம்பிரபைக்கு, அடிமை - அடிமைத்தொழில்
செய்தலில், ஆர்வமொடு அடைந்தார் - மிகுந்த ஆவலுடனே வந்தவர்களும், பின்னிவிடு
கூந்தலர் - சடையாகப் பின்னித் தூங்கவிட்ட அளகத்தையுடையவரும், பிடித்த அயில்வாளர்
- வேலேந்துநரும் வாள்ஏந்துநரும் ஆகிய, கன்னியர் - கன்னிமைத் தன்மையுடைய,
இராயிரவர் - இரண்டாயிர மகளிர்கள், கன்னி புடைகாத்தார் - சுயம்பிரபையை மருங்கில்
நின்று காவல் செய்தனர், (எ - று.)

அயில் - கூர்மையுமாம். நன்கு வித்தை கற்றவரும், ஆர்வமோ டடைந்தவர்களும்,
கூந்தலுடையாரும். அயில் வாள் உடையோரும், கன்னியரும் ஆகிய ஈராயிரவர், கன்னியைக்
காவல் செய்தனர், என்க.

( 42 )