(இ - ள்.) அஞ்சுடர் மணிக்குழவி - அழகிய ஒளியுடைய மணியாலாய பொம்மைக் குழந்தைகளும், ஆடுகழல் - ஆடுகின்ற கழங்குகளும், மாடம் - விளையாட்டு வீடுகளும், பஞ்சுடைய பந்து - பஞ்சாலய பந்துகளும், கிளி - கிள்ளைகளும், பாவை - மரப்பாவைகளும், பூவை - நாகணவாய்ப்புட்களும் ஆகிய இன்னோரன்ன, மஞ்சுடைய மின்னின் அனையாள் - முகிற் கண் உள்ள மின்னை ஒத்த சுயம்பிரபை, மகிழும்நீர - மகிழ்தற்குக் காரணமான பிற விளையாட்டுப் பொருள்களும், செஞ்சுடர் விமானமது சேர்ந்தன செறிந்தே - செவ்விய ஒளியாற்றிகழும் விமானத்தின்கண் சேர்க்கப்பட்டு நிறைந்தன, (எ - று.) மணிப்பொம்மை முதலிய விளையாட்டுக் கருவிகள் விமானத்தே சேர்க்கப்பட்டன என்க. |