870.

கற்பக மலர்ப்பிணையல் சேர்ந்துகமழ் கின்ற
பொற்பமைசெங் கோடிகமொ டாடைபுதை வுற்ற
நற்புடைய பேழைநறுஞ் 1சாந்துநனி பெய்த
செப்பொடு கடப்பக மடுத்தன செறிந்தே.

      (இ - ள்.) கற்பகம் மலர்ப்பிணையல் சேர்ந்து கமழ்கின்ற - வாடுதலில்லாத கற்பக
மலர்மாலை உள்ளே வைக்கப்பட்டுள்ளமையால் நறுமணம் மாறாது கமழ்கின்ற, பொற்பமை
செங்கோடிகமொடு - பொலிவுற்று விளங்கும் செம்பொன்னாலாகிய பூந்தட்டுகளோடு, ஆடை
புதைவுற்ற - பட்டாடைகளைப் பொதிந்துவைத்து மூடப்பட்ட, நற்புடைய - நல்ல
பக்கங்களையுடைய, பேழை - பொற்பேழைகளும், நறுஞ்சாந்து நனிபெய்த செப்பொடு -
மணங்கமழும் நல்ல சாந்துவகைகளை நிறையப் பெய்து வைக்கப்பட்டுள்ள செப்புகளும்,
கடப்பகம் - கடப்பகங்களும், செறிந்து மடுத்தன - விமானத்தில் நிறைந்துவைக்கப்பட்டன,
(எ - று.)

     கடப்பகம் - ஒருவகைப் பேழை. ஏ : அசை. கோடிகம் - பேழை. சாந்துச் செப்பு. கடப்பகம் முதலியனவும் விமானத்தே வைக்கப்பட்டன.

( 44 )