(இ - ள்.) சிகரயானையின் கவிழ்மணி சிலம்பின மத்தக முடியையுடைய யானைகளின் மருங்கே கவிழ்ந்து தூங்கும் மணிகள் ஒலித்தன, பணிலங்கள் சிலம்பின - சங்குகள் ஒலித்தன, முகரவாயின -ஒலிக்கும் இயல்புடையவாயையுடைய, பணவங்கள் - முரசுகள், முரன்றன - ஒலித்தன, முகில் எல்லாம் மகரமால்கடல் வரைமிசை எழுந்து முரன்றன என - மேகங்கள் அனைத்தும் மகர மீன் திரிகின்ற கடலினின்றும் போந்து மலைகளின் வந்து குழுமி முழங்கலாயின என்று கூறும்படி, படைமாற்றம் எழுந்தது - நால்வகைப் படைகளின் முழக்கம் எழுந்தது, நகரவாயிலின் புறம்பணை இரத நூபுர நகரத்தின் மருங்கிலுள்ள நிலங்களெல்லாம், நடுங்கின - அதிர்ந்து நடுக்கங்கொண்டன, கொடியெல்லாம் நடுங்கின - கொடிக்குழாங்களும் ஆடின, (எ - று.) முகரம் - ஒலி. யானைமணிகள் ஒலித்தன; சங்கொலித்தன; முரசங்கள் முழங்கின; முகில் முழக்கம்போலே படை முழங்கின; நிலம் அதிர்ந்தது; கொடி ஆடின; என்க. நானில மாகலின் பன்மையாற் கூறினர். |