(இ - ள்) ஒளிறுவாள் படை உளர்ந்தது - சுடர்வீசும் வாட்படை அசைந்து மின்னிற்று, உழைக்கல உழையோர்கள் - வீரர்களுக்குப் பக்கத்தே படைமுதலியன தாங்கிச்செல்லுநராகிய ஏவலர்கள், கிளர்ந்தனர் - முழங்கினர், நெறித்தலைக் கருமுகில் - வழிக்கண் அகப்பட்ட கரிய மேகங்கள், களிறுகாத்திரம் உறுத்தலின் நெரிவுற்ற - யானைகளின் உடல் உராய்ஞ்சு தலாலே நெரிந்தன, குளிறும் இன்இயம் குழுமலில் - இசைத்தலையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்குதலாலே, செழுமலைக் கொடுமுடி உடன் ஆர்த்த - செழித்த மலைகளின் சிகரங்கள் எதிர்ஒலி செய்தன, வெளிறு இல் கேள்வியான் - பேதைமையில்லாத நூற்கேள்வியையுடைய சடிமன்னனுடைய, பெரும்படை - பெரிய சேனை, விசும்பிடை நிரந்து - இவ்வண்ணம் விண்ணிடத்தே பரவி, ஒளி விரிந்தன்று ஏ - ஒளியைப் பரப்பிற்று, (எ - று,) விரிந்தன்று - விரிந்தது. வாட்படை அசைந்தது ; உழையோர்கள் ஆரவாரித்தனர்; யானைகள் உரிஞ்சுதலாலே முகில்கள் நெரிந்தன; இசைக் கருவிகள் முழங்குதலாலே மலைச்சிகரம் எதிரொலி செய்தன; இவ்வாறு சடியரசன் படை விண்ணில் விரிந்து திகழ்ந்தது என்க. |