875.

அமித மாகிய பெரும்படை யகன்கட லகல்விசும் பழகெய்த
அமித மாகிய பெருவரை 1நிமிர்சிகை யதனய லமர்ந்தேக
அமித மாகிய நிலைத்தலை மலையணி யருவிக ளவையெல்லாம்
அமித மாபவை சயம்பவைக் கடி 2தொழு தவையவை யறிவித்தாள்.
 

      (இ - ள்.) அமிதம் ஆகிய பெரும்படை - அளவிறந்த பெரிய படையாகிய,
அகன்கடல் - அகலிதாகிய கடல், அகல் விசும்பு அழகெய்த - விரிந்த விசும்பு
அழகுடைத்தாமாறு, பெருவரை நிமிர் - பெரிய மலைகளின் உச்சியில் நிமிர்ந்து நிற்கின்ற,
அமிதமாகிய சிகையதன் அயல் - எண்ணிறந்த கொடுமுடிகளின் பக்கத்தே, அமர்ந்து
ஏக-பொருந்திச் செல்லாநிற்ப, நிலத்தலை - பூமியின்மேல், அமிதமாகிய -
எண்ணிறந்தனனவாகவுள்ள, மலை அருவிகள் அணி அவை எல்லாம் - மலைகளும்
அருவிகளும் இன்னோரன்ன பிறவும் ஆகியவற்றின் இயல்புகளை எல்லாம், அமிதமாபவை -
அமிர்தப்பிரபை என்னும் தோழி, சயம்பவைக்கு - சுயம்பிரபைக்கு, அடிதொழுது
அறிவித்தாள் - அடிகளை வணங்கி அறிவிப்பாளாயினாள், (எ - று,)

     அமித மாபவை - அமிர்தப் பிரபை. இவள் சுயம்பிரபையின் உசாத்துணைத் தோழி
என்க. எண்ணிறந்த படைகள், அகன்ற விசும்பு அழகுறும்படி நெடிய மலைச் சிகரங்களில்
அண்மையின் ஏகாநிற்ப, நிலத்தின் கண்ணவாகிய மலை, அருவி, யாறு முதலியவற்றின்
இயல்பெலாம், சுயம்பிரபைக்கு அமிர்தப்பிரபை எடுத்துக் கூறத் தொடங்கினாள் என்க.

( 49 )