இதுமுதல் 13 செய்யுள்கள் ஒருதொடர் (இ - ள்.) நங்கை காண் - சுயம்பிரபாய்! காணுதி!, இது - (இப்பேரியாற்றை), இவ்வியாறு, நம்மலைக்கு உம்பர் - நமது இமயமலைக்கு அப்பால் உயர்ந்துள்ள, அப்பொன்மலைப்புடை வீழும் - அந்தப் பொன்மலைப் பகுதியிற்றோன்றி ஒழுகும், கங்கையாறு - கங்கை கங்கை என்றுலகினர் ஏத்தும் யாறாகும், இதன் கரையன - இக்கங்கையாற்றின் கரையிடத்தே உள்ளனவாகிய இவை - இச்சோலைகள், கற்பகக் காவுகள் கண்டாய் - கற்பகச் சோலைகள் என அறிவாய், இங்கு நாம் இருவிசும்பிடை இயங்கலில் - இவ்விடத்தே யாம் பெரிய விசும்பின்கண் செல்கின்றோ மாகலின், (இறப்பச்சேய்மைக் கண்ணுள்ள நம் கண்கட்கு), சிறிய ஒத்துளவேனும் - இச்சோலைகள் சிறியனபோலத் தோன்றுகின்றனவாயினும், அங்கணார்க்கு - அவற்றின் அண்மையிடத்துள்ளார்க்கு, அறியுங்கால் - அறியப்புகின், அவை - அச்சோலைகள், நம் உலகினை அளப்ப வொத்துள - நமது உலகத்தை முழுதும் தம் விரிவுடைமையால் அளப்பனபோலும் பெரியவைகள் ஆகும், (எ - று.) சுயம்பிரபாய்! இங்குத் தோன்றும், யாறு கங்கையாறாம். அதன் கரையிடத்துள்ள சோலைகள், கற்பகச் சோலைகள். சேய்மையிடத்திருந்து காணும் நமக்கு இவை சிறியவாகத் தோன்றுகின்றனவேனும், அண்மையிலுள்ளார்க்கு அவை சாலப் பெரியனவாதல் காணப்படும் என்றாள், என்க. |