(இ - ள்.) இரைக்கும் அம்சிறை பறவைகள் எனப் பெயர் இனவண்டு - முரல்கின்ற அழகிய சிறகுகளையுடைய, அறுகாற் சிறுபறவைகள் என்னும் பெயரையுடைய அளிக்குலங்கள், புடைசூழ - பக்கத்தே மொய்க்க, நுரைக்கள் என்னும் அக்குழம்பு கொண்டு - நுரைத்த தேன் என்னும் அழகிய குழம்பு களை ஏந்திக்கொண்டுவந்து இட்டு, எதிர்ந்து எழ - கரையைமோதி மறித் தொழிதலால், இலையத்தால் - முறை பிறழாமே, நுடங்கிய - மடங்கி வீழ்தலுடைய, திரைக்கரங்களில் - அலையாகிய தன் கைகளாலே, செழு மலைச் சந்தனத்திரள்களை - செழிப்புடைய மலையினின்றும் தான் வாரிக் கொடுவந்த சந்தனக்குறடுகளை, கரைமேல் வைத்து அரைக்கும் - கரையாகிய கல்லின் மேலேயிட்டு அரைக்கின்ற, மற்று இது - இக்கங்கையாற்றின் வெள்ளம், குணகடற்றிரையொடும் - கீழைக்கடலின் அலைகளோடு, பொருது அலது அவியாதே - போர்செய்து அடங்குவதன்றி இடையே அமையாது என்பதாம், (எ - று.) அஞ்சிறைப் பறவைகள்போலக் சுட்டம் கூட்டமாய்ப் பெயர்ந்து செல்லும் இனவண்டு எனினும் ஆம். இலையம் - லயம் - அலைகள் ஒன்றுபோல அனைத்தும் கரையை மோதி மோதி மீள்தலின் இலயம்பட, என்பார் இலையத்தால் என்றார். இலையம் - கூத்து, கூத்திடுமாறுபோல எனினும் பொருந்தும். |