திருப்பள்ளி எழுச்சி

88. தங்கிய தவழொளி தடாவி வில்லிட
மங்கல வுழைக்கல மருங்கு 2சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் 3செய்தனன்
பங்கய 4முகத்தர்பல் லாண்டு கூறினார்.
 
     (இ - ள்.) தங்கிய - பொருந்திய; தவழ்ஒளி - பேரொளி; தடாவி
வில்இட - மருங்குகளிற் பொருந்தி ஒளியைச் செய்யுமாறு; மங்கலம் உழைக்கலம் - மலர
பொன் மணி கண்ணாடி முதலிய மங்கலப் பொருள்கள்; மருங்கு சேர்ந்தன - அரசனுடைய
படுக்கைக்கு அருகிற் சேர்க்கப்பெற்றன; அங்கு அவன் - அப்பொழுது பயாபதி மன்னன்;
கண் கழூஉ அருளிச் செய்தனன் - எழுந்து கண்களைக் கழுவியருளினான்; பங்கய முகத்தர்
- தாமரை மலர்போன்ற முகத்தையுடைய பெண்கள்; பல்ஆண்டு கூறினார் - அரசன்
பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துப் பாடினார்கள். (எ - று.)

     அரசன் படுக்கையைவிட்டு எழுந்தான். உறங்கி விழித்தவுடன் பார்த்தற்குரிய
மங்கலப்பொருள்கள் அரசன் கண் விழிப்பதற்கு முன்னரே அவனுக்கு அண்மையில்
கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தன. படுக்கையைவிட்டெழுந்த அரசன் கண்களைக்
கழுவிக்கொண்டு அந்த மங்கலப் பொருள்களைப் பார்த்தருளினான். மங்கையர் பல்லாண்டு
பாடினார்கள். நடத்துதல் என்பது நடாத்துதல் என்று விகாரப்படுவதைப்போல் தடவி
எனற்பாலது தடாவி என விகாரப்பட்டது. தடாவி - வளைந்து எனினுமாம். கழுவு என்னும்
முதனிலைத் தொழிற் பெயர் கழூஉ என விகாரப்பட்டு அளபெடுத்தது சொல்லிசை
யளபெடை.
 
( 19 )